Visitors

hit counters

Sunday, March 23, 2014

குக்கூ (CUCKOO) - விமர்சனம்


இரவு நேரங்களில் ராஜா சார் பாடல்களுக்கு அடுத்து மிகவும் பிடித்த ஒன்று புத்தகங்கள் படிப்பது... பொதுவாக ஈ-புத்தகங்களும் சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்களும் என் லிஸ்டில் இருக்கும்... 

தோழர் ஸ்டாலின், "வட்டியும் முதலும்" படித்த அனுபவங்களை பகிரும் போது தனக்கு மிகவும் பிடித்த வரிகளை அடிக்கோடிட்டு வைத்திருந்தார்... அதை மட்டும் படிக்க பக்கங்களை புரட்ட துவங்கியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக என்னை உள்ளிழுக்க துவங்கிவிட்டது அந்த புத்தகம்... நவீனம் என்ற பெயரில் எத்தனை விஷயங்களை இன்று நாம் இழந்திருக்கிறோம்... படிக்க படிக்க மனம் இறுகியது...

காதல், அங்காடி தெரு, நான் கடவுள், அரவான், பரதேசி படங்களுக்கு பின் நான் காத்திருந்த ஒரு படம்...

குக்கூ படத்தின் டீசர் பார்த்ததில் இருந்தே அந்த படத்தின் மீது ஒரு கண்... ட்ரைலர் பார்த்தவுடன் அதன் ஈர்ப்பு அதிகமாகிவிட்டது... பார்வையற்ற இருவரின் காதல் என்ற ஒரு வரியை அழகாய் படம் முழுதும் செதுக்கியிருக்கிறார் ராஜு முருகன்... 

படம் வெகு இயல்பாய் இயக்குனரிடம் இருந்தே துவங்குகிறது... ரயில் நிலையத்தில் "காணவில்லை" போஸ்டரை பார்த்ததும் அந்த எண்ணுக்கு போன் செய்து அங்கு விரைகிறார்... ரயிலில் செல்ல துவங்கும் போது கதையும் பின்னணியில் இருந்து துவங்குகிறது...


தமிழ் (தினேஷ்) நண்பர்களுடன் ரயில் நிலையத்தில் டார்ச், டைரி போன்றவற்றை விற்று பிழைத்து வருகிறான்... அங்கு வரும் தோழியின் மூலம் அறிமுகமாகிறாள் சுதந்திரக்கொடி (மாளவிகா) அவர்களுக்குள் காதல் வர எப்போதும் போல வில்லன், மூணு லட்சம், கட்டாய கல்யாணம் இதையெல்லாம் தாண்டி சேர்ந்தார்களா என்பது மீதிக்கதை... 

தமிழாய் "அட்டக்கத்தி" தினேஷ்... இரண்டாவது படத்திலேயே ராஜபார்வை கமலையும், காசி விக்ரமையும் சேர்த்து ஒப்பிட வைக்கும் அளவுக்கு வெகு இயல்பான நடிப்பு...

சுதந்திரக்கொடியாய் மாளவிகா... "அசிங்கமா இருந்தா விட்ருவியா" என்று கேட்கும் இடத்திலும் சரி, ஹோட்டலில் பழைய துணியை வாங்கிக்கொள்ள சொல்லும் போது அவர் கொடுக்கும் முகபாவம் அபாரம்... எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் இல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்... 

அது போக, எப்போதும் தமிழுடன் இருக்கும் தோழன் சோமசுந்தரம், சந்திரபாபு, தல, தளபதி, எம்.ஜி.ஆர் கெட்டப்புகளில் வரும் கதாபாத்திரங்களும் அருமை... 


பார்வையற்றவர்கள் வரும் எந்த காட்சியிலும் சோக வாசம் வீசக்கூடாது என்பதில் இயக்குனர் மிகவும் தெளிவாக இருந்திருக்கிறார்... அவர்களுக்குள் அடிக்கும் நையாண்டிகள் அவர்களுடனே பயணம் செய்வது போன்ற ஒரு உணர்வு... பல இடங்களில் இளையராஜா வாசம் அழகாய் வீசுகிறது... விஜயும் அஜீத்தும் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை பாவம் அநியாயத்திற்கு கலாய்த்துவிட்டார்...

இந்த படத்தில் முக்கியமாய் பேசப்படவேண்டிய ஒன்று வசனம்... ஒவ்வொரு வசனமும் நச்... அதிலும் சமூகத்தை பற்றிய வசனங்கள் மரண கொட்டு...

 • பெரிய அண்ணனுக்கு பவர் இல்லடா... சின்ன அண்ணனுக்கு தான் இப்ப பவர்...
 • நம்ம நாட்டோட பெரிய பிரச்சனை ரெண்டு... ஒன்னு பவர் கட்டு இன்னொன்னு மக்கள் தொகை... இது ரெண்டுக்கும் தொடர்பிருக்கு...
 • கரண்ட் போய்டுச்சு...
  தமிழ்நாடு எப்போ சார் குஜராத் மாதிரி டெவலப் ஆகும்???
 • காரைபார்த்தும் மாரைப்பார்த்தும் வரும் காதலுக்கு நடுவில் பார்க்காமல் ஒரு காதல்...(ஏற்கனவே டீசரில் வந்த வசனம்)
 • அவனவன் பதினஞ்சுலையே பழுத்துடுறான் எவன் 21 வரைக்கும் காத்திருக்கான்...
 • தமிழ் வக்கீல் படிக்க போறானா???
  அவன் இருக்குற மூடுல கண் டாக்டருக்கே படிப்பான்...
 • எல்லா நடிகைக்கும் டப்பிங் வாய்ஸ்.. யாருமே சொந்தமா தமிழ் பேச மாட்டாங்களா...

இப்படி ஒரு கதைக்களம் தேர்ந்தெடுத்த ராஜு முருகனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... எந்த இடத்திலும் அவர்கள் மீது பரிதாபம் வராத ஒரு அழகான திரைக்கதை...

முகநூலில் லைக் வாங்க கொடியை போட்டோ எடுக்கும் காட்சி, முகநூல் கிறுக்குகளுக்கு செருப்படி... தமிழ், பணம் கேட்கும் போது எம்.ஜி.ஆர் வேஷம் போடுபவர் தன் சங்கிலியை கொடுக்கும் காட்சியில் எம்.ஜி.ஆர் மட்டுமே எல்லார் கண்களிலும் தெரிந்தார்...

இசை சந்தோஷ் நாராயணன்... ஜிகர்தண்டாவிற்கு அடுத்து அப்படியே எதிர் மாறான இசை... சுமார் என்று எந்த பாடலையும் ஒதுக்க முடியவில்லை... ஏண்டா மாப்ள பாடல் மட்டும் படத்தில் இல்லை...

யுகபாரதியின் வரிகள் முத்துக்கள்...பி.கே. வர்மாவின் ஒளிப்பதிவு அருமை... முக்கியமாக ரயில், ரயில் நிலையங்களை காட்டும் காட்சியாகட்டும், நாயகன் பார்க்க வரும் போது சன்னல் ஓரத்தில் நாயகிக்கு வைத்த ப்ரேமிலும், க்ளைமேக்ஸில் ஹீரோவுடன் பயணிக்கும் ஷாட்டிலும் சரி உறுத்தாத ஒளிப்பதிவு...

முற்பாதியுடன் ஒப்பிடும் போது பிற்பாதி சற்று தொய்வு தான்... இருந்தாலும் பெரிய குறைகள் எதுவும் இல்லாத காரணத்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்...

முதல் வரிகளில் அவர்களை "பார்வையற்ற" என்று சொல்லியது எனக்கு சற்று மனவருத்தம் தான்... புரியவைக்க வேறு வார்த்தை இல்லை... 

அவர்களை குருடர்கள் என்று கூற நமக்கு என்ன அருகதை இருக்கிறது... 
 • சாலை ஓரத்தில் உயிருக்கு போராடும் ஒருவனை காப்பற்ற நேரமில்லாத நாம்,
 • பக்கத்து வீட்டில் சண்டை என்றால் சன்னலை சாத்திக்கொள்ளும் நாம்,
 • வெறும் அட்டைக்கு பாலாபிஷேகம் செய்து சிக்னலில் சில்லறை போடாத நாம்,
 • எச்சில் துப்பாதே என்று போர்டு வைத்தால் அதன் மீதே எச்சில் துப்பும் நாம்,
 • நாட்டின் வளங்களை நம் கண் முன்னே அள்ளிக்கொண்டு போகும் போது அவர்களுக்கு கூஜா தூக்கிய நாம்,

எந்த வகையில் அவர்களை விட உயர்ந்தவர்களாகி விட்டோம்... கண்ணிருந்தும் குருடனாய், கடிவாளம் கட்டிய குதிரையாய் ஒரு அர்த்தமற்ற வாழ்க்கையை ஏற்படுத்திய இந்த சமூகத்தை திட்ட சொல்லும் நம் சுயநலம் நாம் ஒழுங்கா இருக்கணும்ன்னு எண்ணுவதில்லை... மக்களை சொல்லி என்ன செய்ய... எரியும் சுள்ளியில் எது நல்ல சுள்ளி??

ஒரு வேளை இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது தமிழ் போல, எவரேனும் உங்களை கடந்தால் தயவுசெய்து ஒரு கைக்குட்டையாவது வாங்குங்கள்...

- கெளதம் GA 24/03/14

You may like this