இறுகிக்கொண்டிருக்கும் இந்தியாவின் பிடி - 1


பச்சை பசேல் என்ற புல்வெளி அதில் கலைநயமிக்க வெள்ளைநிற மாளிகை, நீல வான பின்னனி, ஒங்கி வளர்ந்த மரங்களுக்கிடையில் ஒய்யார குதியாட்டம் போடும் முயல்குட்டிகள், அழகான மனைவி, அறிவார்ந்த குழந்தைகள் இப்படி ஒரு ஆனந்த வாழ்வு ஒரு மனிதனுக்கு கிடைத்துவிட்டால் நிம்மதி என்பது தாமாக வந்துவிடுமா?




      அதிக ரத்த அழுத்தம்  , நானூறை தாண்டும் சக்கரை, நெஞ்சு படபடப்பு, இத்தனை நோய் ஒரு புறம் என்றால் எமன் மாதிரி  வந்து உட்கார்ந்து கொண்ட புற்றுநோய் எப்படி வரும் சந்தோஷம்.  கோட்டை கட்டி வாழ்ந்தாலும் உடல் கூடெல்லாம் நோயால் சூழப்பட்டால் எங்கேயிருந்து மகிழ்ச்சி வரும்.  ஒட்டை வீட்டில் உறங்கினாலும், அடுத்த வேளைக்கு உணவு இல்லை என்றாலும், மாற்ற கூட துணியில்லையென்றாலும் ஆரோக்கியம் மட்டும் இருந்துவிட்டால் ஆனைகூட்டம் எதிரே வந்தாலும் பூனைகளை போல் தூக்கி போடலாம் அதனால் தான் நமது முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற  செல்வம் என்றார்கள்.


        ஒரு தனிமனித சுகவாழ்வுக்கு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ ஏன் அதை விட முக்கியமானது ஒரு தேசத்தின் பாதுகாப்பு.  வெள்ளி பனிமலையில் தூங்காத இரவுகளை தினசரி ராணுவவீரன் எதிர்கொண்டால் தான் வீட்டு திண்ணையில் நாம் நிம்மதியாக தூங்க முடியும் என்ற வார்த்தை மிகைப்படுத்தப்பட்ட கருத்து அல்ல, கண் முன் நிஜமாக நிற்கும் உண்மையாகும்.



     தேச பாதுகாப்பு என்றவுடன்  நமது மனக்கண் முன்னால் காஷ்மீர் பள்ளத்தாக்குகளும் குஜராத் கடற்கரைகலும், ராஜஸ்தான் பாலைவனங்கலும் தான் நமக்கு நினைவுக்கு வரும்.  இந்தியாவின் விரோதி யாரென்று தெருவில் கோலி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவனை கூப்பிட்டு கேட்டாலும், திண்ணையில் பல்லாங்குழி ஆடும் பாட்டியிடம் கேட்டாலும் பாகிஸ்தான் என்று பளிச்சென்று பதில் வரும், நிஜமாகவே நமது எதிரி நாடு பாகிஸ்தான் தானா?  பாகிஸ்தான் மட்டும் தானா? நேரு காலம் தொடங்கி மன்மோகன்சிங் காலம் வரையில் காங்கிரஸ் அரசாங்கம் அப்படி தான் சொல்லி கொண்டு வருகிறது.  அல்கொய்தா தாலிபான் இன்னும் என்னென்னவோ வாயில் நுழையாத அரபு பெயர்களில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தான் வழியாக தான் இந்தியாவிற்குள் நுழைகின்றன.   


நமது நாடெங்கும் குண்டுகளை வைப்பதும், பாரளுமன்றத்துகுள்ளேயே தாக்குதல் நடத்துவதும், மும்பை பெருநகரத்தில் ஆக்கிரமிப்பு செய்வதும் பாகிஸ்தான் உளவு படையின் கைங்கர்யம் தானே.  அதனால் காங்கிரஸ் சொல்லுவது சரியாகத் தான் இருக்கும் என்று ஆடு மேய்க்கும் அண்ணாமலையிலிருந்து கணிப்பொறி தட்டும் கவிதா வரையிலும் நம்புகிறார்கள்.   இந்த நம்பிக்கை உண்மையா?


     நம்பிக்கை என்னவோ உண்மைதான் ஆனால் பாகிஸ்தான் மட்டும் தான் எதிரியென்று காங்கிரஸ் சொல்லுவது உண்மையல்ல.  வடஎல்லையில் பாகிஸ்தானில் மட்டுமல்ல, ஆப்கானிஸ் தானிலிருந்தும்  பயங்கரவாதிகள் உடுருவுகிறார்கள் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் சீனாவின் ஆக்கிரமிப்பு கரம் ரகசியமாக நீண்டு கொண்டுயிருக்கிறது.  வங்கதேசத்தில் இருந்து அந்நிய அடிப்படைவாத அமைப்புகள் நாட்டிற்குள் குடியுரிமை பெற்று சுகந்திரமாக நடமாடுகிறார்கள்.   நேற்றுவரை நேபாளத்தில் இருந்த மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு பொதுவுடமை தீவிரவாதிகளின் சர்வதிகார அரசு பொறுப்பேற்று ஈரம் காய்வதற்குள்ளே இந்திய நக்சல்பாரி இயக்கங்களோடு கைகோர்க்க ஆரம்பித்துவிட்டது.  


     இந்திய அரசின் பழிவாங்கும் போக்கால் இலங்கையின் இனவாத அரசு புத்துயிர் பெற்று சீன பங்காளிகளோடு உறவாடி அமைதி பூங்கவான இந்தியாவின் தெற்கு எல்லையில் பீரங்கி முழக்கங்கள் வருங்காலத்தில் கேட்க வழி ஏற்பட்டு இருக்கிறது.  மக்மோகன் எல்லை கோட்டை பொருட்படுத்தாத சீனா அருணாச்சல பிரதேச மாநிலத்தையே தனக்கு சொந்தமென உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டது.  பக்கத்து நாடான பர்மா கூட இன்று இந்தியாவுக்கு நண்பன் இல்லை.  பூடானும், மாலத்தீவும் தொடர்ந்து நண்பர்களாகயிருப்பார்களா என்பதும் சந்தேகமே, ஆக இத்தனை எதிரிகள் நம்மை நாலாபுறமும் சுற்றி நின்று கொத்தி குதற முயற்சிக்கும் போது பாகிஸ்தானை மட்டும் பகையாளியாக காட்டுவது மக்களை திசை திருப்பும் முயற்சி ஆகும்.

      ராணுவரீதியில் பார்க்கும் போது பாகிஸ்தான் என்பது நமது பெண்களின் பாவாடை நாடாவுக்கு சமமானது. அமெரிக்க அண்ணா மட்டும் அந்நாட்டை கண்ணெடுத்து பார்க்கவில்லையென்றால் வெறும் ஐந்து மணி நேர தாக்குதலிலே இஸ்லாமாபாத்தை டெல்லியோடு இணைத்து விடலாம்.  ஆனால் சீனா அப்படியல்ல பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் நம்மை விட பெரியது , என்று மட்டும் தான் நாம் நினைத்து கொண்டியிருக்கிறோம்.   உண்மையில் சீனாவின் ராணுவபலம் என்பது தற்போதைய சூழலில் பீம புஷ்டி கொண்டது என்றே சொல்லலாம்.  இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு அதன் ராணுவபலம் அமெரிக்காவுக்கு இணையாகிவிடுமாம்.


  கடந்த 2009-தாம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்தி முன்றாம்தேதியன்று சீனாவில் உள்ள கிங்டாவோ என்ற இடத்தில் முதலாவது சர்வதேச கப்பல் படை அணிவகுப்பு நடந்தது.  இந்த அணிவகுப்பில் பங்குபெற இந்தியாவிலிருந்து இரண்டு போர் கப்பல்கள் உட்பட பதினாலு நாடுகளிலிருந்தும் பல  போர் கப்பல்கள் வந்து கலந்து கொண்டன.  ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்த கையோடு இந்த அணிவகுப்பை நடத்தி சர்வதேச ராணுவ நிபுணர்களின் வியப்பிற்கு உரம் போட்டது, எனது பொருளாதார பலம் என்பது உலகம் நினைப்பது போல சாதாரணமானது அல்ல, ஒரே நேரத்தில் சர்வதேச விளையாட்டையும், சர்வதேச ராணுவ அணிவகுப்பையும் என்னால் நடத்த முடியும் என்று உலகத்தின் முகத்தில் ஒங்கி அறைந்து சொல்வது போல சொல்லி சீனா உலகை அதிர வைத்திருக்கிறது. 

தொடரும் -    

நன்றி : உஜிலாதேவி....

Comments