எதிர் நீச்சல் கொடுத்த ஓபனிங், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை அதிகம் எதிர்பார்க்க வைத்திருக்கிறது... கூடவே ஊற தாங்கும் பாடலும், ஊதா கலரு ரிப்பன் பாடலும் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிவிட்டிருக்கின்றன... அதன் தாக்கம் இதில் நன்றாகவே தெரிந்தது... மதகதராஜா நாக்கு தள்ளியதில் போட்டி இல்லாமல் தனியாக களம் இறங்கியுள்ளது...
சூது கவ்வும் படத்திற்கு பிறகு, ஒரு நல்ல முழு நகைச்சுவை திரைப்படமாய் இதை நீங்கள் எதிர்பார்க்கலாம்...
கதையின் துவக்கத்தில் ஒரு சண்டை. அது காவல் நிலையம் போக, அதில் சத்யராஜ் பற்றியும் அவர் மகளை அவரே கௌரவ கொலை செய்துவிட்டதாக ஒருவர் உளறிவிட அதை வைத்து போலீஸ் அவரை கைது செய்கிறது. பிணத்தை மேகமலையில் புதைத்தகாக கூற, அந்த இடத்திற்கு போலீசுடன் சத்யராஜ் செல்லும் போது அங்கே இருந்து நினைவலைகள் (பிளாஸ்பேக்) துவங்குகிறது.
கதைக்களமான சிலுக்குவார்பட்டியில் கிட்டத்தட்ட ஒரு நாட்டமை ஸ்டைலில் வாழ்ந்து வருகிறார் சிவனாண்டி (சத்யராஜ்).. கூடவே நான்கு அல்லக்கைகள்... அவர் தும்மினாலும் அதில் பெருமை பேசும் ஒரு ஜால்ரா கூட்டம்... அதே ஊரில் சண்டித்தனம் செய்துகொண்டு இருக்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவனும் கதாநாயகனுமாகிய போஸ்பாண்டி (சிவகார்த்திகேயன்), கூடவே வரும் ஏழரை நண்பனாக கோடி (பரோட்டா சூரி)...
சத்யராஜ் குடும்பத்தில் முதல் இரண்டு மகளுக்கும் நல்ல சம்பந்தத்துடன்(?!?!?!?) திருமணம் முடிய, மூன்றாம் பெண்ணையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்ய நினைக்கும் போது சிவகார்த்திகேயன் கொடுத்த வழக்கால் திருமணம் நிற்கிறது... பிறகென்ன, எதிர்பார்த்தது போலவே கதாநாயகனை லவ்வ துவங்குகிறார் கதையின் நாயகி லதாபாண்டி (ஸ்ரீ திவ்யா)...
இந்த விஷயம் சத்யராஜுக்கு தெரிய வர, உடனே வேறு மாப்பிள்ளையுடன் திருமணதிற்கு ஏற்பாடு செய்கிறார். நடு இரவு இருவரும் தப்பித்து ஓட, அவர்களை தேடி சத்யராஜ் செல்கிறார்... அத்துடன் நினைவலைகள் முடிந்து மேகமலையை அடைகின்றனர்... கதையின் முடிச்சு படத்தின் இறுதியில் தான் அவிழ்கிறது... அது தான் எதிர்ப்பார்க்காத கதையின் திருப்பம்... அதை திரையில் காண்க...
போஸ் பாண்டியாய் சிவகார்த்திகேயன். நக்கல், நையாண்டி, எடக்கு, முடக்கு, திமிரு, முக்கல், முனகல் என அனைத்து துறைகளிலும் முதுகலைபட்டம் பெற்ற ஒருவராய் இதில் தெரிகிறார்... அதிலும் அவரும் சூரியும் அடிக்கும் லூட்டிகள் திரையில் சரவெடி... நிறுத்த முடியாத சிரிப்பு... அவர்களுக்குள் கலாய்த்துக்கொள்ளும் இடமாகட்டும், அடுத்தவர்களை கலாய்க்கும் இடத்திலும் காமெடி விசில் பறக்கிறது... அது மட்டும் இல்லாது சிவகார்த்திகேயனிடம் நடிப்பிலும் ஒரு நல்ல தேர்ச்சி தெரிகிறது...
எதிர் நீச்சல் படத்தில் ஓட்ட பந்தயம் அது இது என சில சிதறல்கள் இருந்தன... இதில் அது போல ஒன்றும் இல்லாத தெளிவான கதைக்களமே அவருக்கு பெரிய வரம்... எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்ய முழுமையான வாய்ப்பு... இது போன்ற கதைக்களத்தில் ஒரு சிக்கல் உள்ளது... ஒன்று படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிடும் இல்லை சூப்பர் பிளாப் ஆக்கிவிடும்...
இதில் சிவகார்த்திகேயன் முதல் தரம்... கொடுத்த இடங்களையெல்லாம் சூரியுடன் நிரப்பும் நடிப்பும் டைமிங் சென்ஸும் அற்புதம்...
லதாபாண்டியாக ஸ்ரீ திவ்யா. நடிப்பில் பெரிய ஸ்கோர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அந்த அளவுக்கு பெரிய வாய்ப்பும் இல்லை ஒரு சில இடங்களை தவிர... ஸ்கூல் பெண்ணாக சுடிதாரை விட, சேலையில் ரொம்ப அழகாய் இருக்கிறார்... (அது மட்டும் ஏன் என்று எனக்கு தெரியவில்லை. எங்கள் கல்லூரியிலும் இதே போல தான் மொக்கை பிகர்கள் கூட சேலையில் நஸ்ரியா ஆகிவிடுவார்கள்)
எப்போதும் கையில் துப்பாகியுடன் வரும் சத்யராஜ், கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்... க்ளைமேக்ஸ் மட்டும் தான் அவருக்கு கொஞ்சம் ஒட்டவில்லை...
இயக்குனர் ராஜேஷின் வசனங்கள் படத்தின் முதுகெலும்பு என்றே சொல்லலாம்...
- "உனக்கு ஒரு டீ டிகாஷன் கூடவா இல்லை.
டேய் அது டெடிகேஷன் டா".
- "என்னைய விட்டுட்டு போனா கூட பரவால. திருவிழாவுல டெல்லி அப்பளம் விக்கிறவன் மாதிரி இருக்கான் அவனை போய் கட்டிகிட்டாளே"
- "டேய் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம படி.
ஆமா, நீ பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவ" - (காதலில் தோற்ற சோகத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனிடம்)
"அண்ணே எங்க அக்கா உங்களை பாக்கணுமாம் கூப்பிடறாங்க.
அப்படியா, உங்க அக்கா பாக்க நல்லா இருப்பாங்களா"
ஐயோ, நான் சொன்னது லதா அக்கா..
இவை எல்லாம் ஒரு பானை சோற்றின் ஒரு சோறு.
சில இடங்களில் வசனங்கள் சின்க் இல்லை... ஒரு இடத்தில் வசனமே இல்லை (இந்த பொண்ணுங்களே இப்படிதான் பாடலுக்கு முன்)
இமானின் பாடல்கள் ரத்தினங்கள்... ஏற்கனவே சொன்னது போல "ஊற காக்க உண்டான சங்கம்", "ஊதா கலரு ரிப்பன்", "இந்த பொண்ணுங்களே இப்படிதான்", "பாக்காதே பாக்காதே" என படத்தின் 90% பாடல்கள் ஏற்கனவே ஹிட்... படத்தின் வெற்றி மற்றும் நல்ல ஓபனிங் இரண்டிற்கும் இவை முக்கியப்பங்கு...
ஒரு இடத்தில் சத்யராஜின் க்ளோசப் காட்சியும் மாஸ்டர் காட்சியும் செட் ஆகவில்லை (எடிட்டர் கவனத்திற்கு)
சூது கவ்வும் படத்தில் 5 விதிகள் போடுவது போல, இந்த மாதிரி படங்களில் ஒரே விதி "லாஜிக் அறவே கூடாது"... இதை கிண்டலுக்காக சொல்லவில்லை... ஒரு முழுமையான காமெடி கதையில் முழுமையான லாஜிக் எதிர்பார்ப்பது தவறு... அப்படி எதிர்பார்த்தால் அது கதையின் ஓட்டத்தை பாதிக்க கூட காரணமாக அமையலாம்... எனவே லாஜிக்கை அறவே தவிர்த்து விடுங்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நடிகர், வந்த புதிதில் மூன்று படங்கள் வரிசையாக ஹிட் ஆக, ஆக்சன் பன்ச் டயலாக் என காரசாரமாக நடிக்க துவங்கினார்... படங்களோ வரிசையாக பிளாப் ஆக துவங்கின... நயன்தாராவுடன் ஒரு படத்தில் காமெடி கலந்த ஒரு நாயகனாய் நடிக்க, படம் நல்ல ஹிட். அதன் பிறகு தான் அவருடைய பாணியை தானே வடிவமைத்துக்கொண்டார். பின்னர் அவரே சிவகார்த்திகேயனை வைத்து "எதிர் நீச்சல்" படத்தை தயாரித்தார்... அவர் நடிகர் "தனுஷ்".
அதே போல, சிவகார்த்திகேயன் தனது கதைக்களம் பற்றி தெளிவாக அறிந்திருப்பார் என்று நம்புகிறேன்... இனிமேலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடிக்கிறேன் பேர்வழி என்று மொக்கை போட்டுக்கொண்டு இருப்பதை தவிர்த்து, இதே போன்ற கதைகளை தேர்ந்தெடுத்தால் கூடிய விரைவில் சி.எம் ஆகி விடலாம்... ;-)
மொத்தத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், விநாயகரின் ஆசிர்வாதத்துடன் விநாயகர் சதூர்த்தி விடுமுறையில் குடும்பதுடன் பார்க்க வேண்டிய படம்...
Comments