Visitors

hit counters

Friday, May 7, 2010

8000 பேரை பலி கொண்ட போபால் கொடுமையும் ராஜீவ் மரணமும்


ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தாயார் 80 ஆவது வயதில் கடும் நோயால் பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வந்தால் ‘விடமாட்டோம்’ என்கிறார்கள். தமிழ்நாடு என்ன, கண்டவர்கள் நுழையும் ‘தர்ம சத்திரமா’ என்று பார்ப்பனத் திமிரோடு கேள்வி கேட்கிறார், சுப்ரமணியசாமி. இந்த எதிர்ப்புகளுக்கு முன் வைக்கப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை!

ஈழ விடுதலைப் போராட்டத்தையே ராணுவத்தால் ஒடுக்கிட அனைத்து உதவிகளையும் செய்தது சோனியா, மன்மோகன் ஆட்சி! காரணம் என்ன சொல்லப்பட்டது? அதே ராஜீவ் சாவுதான்! 19 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த பிறகும் நளினியை விடுதலை செய்யக் கூடாது. அவர் மரணத்தை சந்திக்கும் வரை சிறைக்குள்தான் இருக்க வேண்டும் என்று டெல்லி சோனியா வட்டாரமும், தமிழக போலி கதர்ச்சட்டை ‘கனபாடிகளும்’ கூப்பாடு போடுகிறார்கள். கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. ஆட்சி அதற்கு தண்டனிட்டு பணிந்து போய் கிடக்கிறது. சொல்லப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை செய்யப்பட்டார் என்பதுதான்!

ராஜீவ் கொலை 1991 ஆம் ஆண்டு நடந்தது. 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ராஜீவ் ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம், அங்கே பல்லாயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது. ராஜீவ் அனுப்பிய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களும் ராஜீவ் உயிரைப் போல் முக்கியமானதுதான். ராஜீவ் மரணத்துக்குப் பிறகு அவரது மனைவி சோனியா, இந்தியாவின் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டார். ராஜீவின் மகனை அடுத்த பிரதமர் பதவிக்கு தயார் செய்து வருகிறார். ராஜீவ் கால காங்கிரசில்கூட அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு அணிகள் இருந்தது உண்டு. சோனியாவோ ராஜீவையும் மிஞ்சி தனது கட்சியை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். அமைச்சரவை முடிவுகள் ஏதுமின்றியே தன்னிச்சையாக தனது ஆணைக்குட்பட்ட ‘மலையாள அதிகாரக் கும்பல்’ ஒன்றை அமைத்துக் கொண்டு, அதன் வழியாக ஈழத்தில் இனப்படுகொலைகளுக்கு திட்டம் தீட்டித் தந்து ஒரு விடுதலைப் போராட்டத்தையே சீரழித்து விட்டார். கேட்டால் ராஜீவ் கொலை செய்யப்பட்டாரே என்று கூறுகிறார்கள்.

ஆனால், இதே காங்கிரஸ் ஆட்சியில், போபாலில் என்ன நடந்தது? யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய விஷவாயுவால் பல்லாயிரம் மக்கள் பிணமானார்களே; லட்சக்கணக்கான மக்கள் உடல் ஊனமானார்களே; அவர்களின் கதி என்ன? ராஜீவ் உயிருக்காக மட்டும் குடம் குடமாக 20 ஆண்டுகளாக கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் கட்சி, பாதிக்கப்பட்ட அந்த ஏழை எளிய மக்களுக்கு, 25 ஆண்டுகாலத்துக்குப் பிறகாவது நிவாரண உதவிகளைப் பெற்றுத் தந்ததா? ராஜீவ் உயிர் மட்டும்தான் உயிரா? மற்ற மனித உயிர்கள் எல்லாம் இவர்களுக்கு மயிருக்குச் சமமா?

நாம் இப்போது, இதை எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி, போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கோரி, டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் பாதிக்கப்பட்ட போபால் மக்கள் கூடினார்கள். போபாலிலிருந்து நியாயம் கேட்டு டெல்லிக்குப் புறப்பட்டு வந்த இந்த மக்களை ஜந்தர் மந்தர் பகுதியில் சில மணி நேரம் மட்டுமே கூடுவதற்கு, டெல்லி போலீசார் அனுமதித்தனர். ஏப். 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்திடும் உறுதியோடு, மக்கள் அங்கே கூடினர். (அது போராட்டம் நடத்துவதற்காக எப்போதும் அனுமதிக்கப்பட்டுவரும் பகுதி தான்) டெல்லி போலீசாரோ, பிற்பகல் 4 மணிக்குள் டெல்லியை விட்டே வெளியேறிட வேண்டும்; கூடாரங்கள் அமைத்தால் கிழித்து எறிந்து விடுவோம் என்று, மிரட்டி, ஆடுமாடுகளைப் போல் அந்த மக்களைத் துரத்தி அடித்துள்ளனர். காரணம் என்ன கூறப்பட்டது என்றால், டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதால் தொடர் போராட்டத்துக்கு அனுமதிக்க முடியாதாம்!

உள்நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு நிவாரணம் வழங்குவதைவிட, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தான் அவர்களுக்கான முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. அலைக்கழிக்கப்படும் இந்த அப்பாவிகளின் சோகக் கதையைப் பாருங்கள்!

25 ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதால் பலியான மக்கள் 8 ஆயிரம் பேர்; உடல் ஊனமுற்றவர்கள் 5 லட்சம் பேர்; இந்த படுபாதகத்துக்குக் காரணம் - யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனம். அதன் அலட்சியத்தால் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நடத்திய ஆபத்து நிறைந்த தொழிற்சாலையில் நடந்த கோளாறால் விஷவாயு வெளியேறி, இத்தனை ஆயிரம் மக்களை பிணமாக்கியது. முதன்மையான குற்றவாளியான அந்த நிறுவனத்தை அதன் தலைவராக இருந்த இராபர்ட் ஆன்டர்சன் என்ற நபரை விசாரணைக்கு உட்படுத்தும் எந்த முயற்சியையும் இந்த ஆட்சி எடுக்கவில்லை. இறந்து போனது 8000 போபால் அப்பாவிகள் தானே ! ‘ராஜீவ் காந்தி’ உயிராக இருந்திருந்தால் இப்படி அலட்சியப்படுத்தியிருக்க மாட்டார்கள் தானே!

போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்து, உபாதைகளுடன் வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் 55 பேர் - 2006 ஆம் ஆண்டில் போபாலிலிருந்து டெல்லி வரை நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர். 800 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, தங்களது அவலத்தை நேரில் விளக்கினர். தங்களுக்கு உரிய நிவாரணம் தராமல், விசாரணைக்கும் வராமல் இருக்கும் அமெரிக்க நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரங்கள் நிறைந்த ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. அதற்கு மன்மோகன் சிங் தயாராக இல்லை. கண் துடைப்புக்காக அரசு அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ‘அதிகாரம்’ இல்லாத ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை நியமித்தார். அந்தக் குழுவும் சில பரிந்துரைகளை, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால் ஒரு பரிந்துரையைக்கூட இதுவரை சோனியா, மன்மோகன் ஆட்சி செயல்படுத்த முன்வரவில்லை. 8000 பேர் உயிரும் ராஜீவ் உயிருக்கு இணையாகி விடாதே! போபாலில் போன உயிர் ராஜீவ் காந்தி உயிர் அல்லவே!

விடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்து போன மக்கள் மீண்டும் 2008 ஆம் ஆண்டு அதே போல் 800 கிலோ மீட்டர் நடைபயணமாக டெல்லிக்கு வந்தனர். அப்போது பிரதமரை சந்திக்கவில்லை. அதிகாரம் கொண்ட ஆணையம் ஒன்றை அமைத்து, தங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றித் தருமாறு மன்றாடினர். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியின் நடைப் பாதையிலேயே (பிளாட்பாரங்களில்) ஆண்களும், பெண்களுமாக முகாமிட்டனர். கொளுத்தும் வெய்யிலிம் கொட்டும் மழையிலும் அவர்கள் நடைபாதைகளிலேயே நடத்திய போராட்டம் நீடித்த காலம் - ஒன்று, இரண்டு நாட்கள் அல்ல. 5 மாதங்கள், அங்கேயே இருந்து போராடினார்கள். “பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு வேண்டும்; குடும்பத் தலைவர்களை விபத்தில் பறிகொடுத்த குடும்பத்தினருக்கு, மறு வாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”என்பதுதான் அவர்களின் கோரிக்கை.

5 மாதம் தொடர்ந்து போராடிய பிறகே 2008 ஆம் ஆண்டு மே29 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தின், இணை அமைச்சரான பிரித்திவ்ராஜ் சவான், அந்த மக்களை சந்திக்க வந்தார். அவர்களின் கோரிக்கைகளை ‘கொள்கை அளவில்’ ஏற்றுக் கொள்வதாக உறுதி கூறினார்.

அதற்கு 3 மாதங்களுக்குப் பிறகு, மத்திய ரசாயணம் மற்றும் உரத் தொழல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அதே 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி, ‘அதிகாரம் நிறைந்த ஆணையம்’ ஒன்றை அமைப்பதற்கான வரைவு நகலை, தமது அமைச்சகம் தயாரிக்கும் என்றும், அது பிற துறைகளின் கருத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்தார். அறிவிப்போடு அதுவும் நின்று போனது.

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட 10000 பேருக்கு அரசு புனர்வாழ்வு மய்யங்களில், வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று, இந்திய அரசு தந்த உறுதிமொழியும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. ஒருவருக்குக்கூட வேலை வழங்கப்படவில்லை.

விஷவாயு பாதிப்பால் போபால் நிலத்தடி நீர் குடிப்பதற்கு தகுதியில்லாமல் கெட்டுப் போனது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சில தொண்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பாதிக்கப்பட்ட போபால் பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் வாழும் 20000 மக்களும் இன்று வரை அந்தக் கெட்டுப் போன குடிநீரையே பயன்படுத்தும் நிலக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விஷவாயுவால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய அதே வழக்கில், உச்சநீதிமன்றம் கண்காணிப்புக் குழு ஒன்றை நியமித்தது. அந்தக் குழு போபால் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையைக் கண்காணித்து, 6 முறை அறிக்கைகளை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியது. மருத்துவ சிகிச்சை என்பது பெயரளவில்தான். பாதிக்கப்பட்டவர்கள் அவமானகரமான நிலைக்கு புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கான தனித் தனி விவரங்களோடு அந்த அறிக்கை விரிவாக விளக்கியது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் 7வது அறிக்கையாக “ஒரு பரிந்துரையையும் இதுவரை ஆட்சி செயல்படுத்தவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை, உச்சநீதிமன்றம் எங்களுக்குத் தர வேண்டும். இல்லை என்றால், குழுவையே கலைத்து விடலாம்” என்று உச்சநீதிமன்றத்துக்கு எழுதியது.

உயிர் பிழைத்து நோய்க்கும், ஊனத்துக்கும் உள்ளாகியுள்ள போபால் மக்கள், அரசின் உறுதிமொழிகளை நிறைவேற்றக்கோரி, அமைதி வழியில் நடத்தி வரும் போராட்டங்களை ஆட்சியாளர்கள் ஒடுக்குகிறார்கள். அவர்களை கைது செய்து, சிறையில் அடைக்கிறார்கள். டில்லி திகார் சிறைக்குள் மூர்க்கத்தனமாகத் தாக்கப்படுகிறார்கள்.

மீண்டும் டெல்லிக்கு வந்த போபால் மக்கள் - இப்போது ‘காமன் வெல்த்’ விளையாட்டைக் காரணம் கூறி, விரட்டப்பட்டுள்ளனர். ஒரே ஊரில் 8000 மக்களை பலி கொடுத்துவிட்டு, 5 லட்சம் மக்கள் உடல் ஊனமுற்று, பல்லாயிரக்கணக்கான மக்கள் விஷவாயுக் கசிவால் கடும் நோய்க்கு உள்ளாகி தவிக்கும், ஒரு வாழ்வுரிமைப் பிரச்சினையில் 25 ஆண்டு காலம், அலட்சியப்படுத்தி, அமெரிக்கக் கம்பெனிக்காரனிடம் விசுவாசம் காட்டி நிற்கும், இந்தப் பார்ப்பன ஆட்சியையும், அதன் எடுபிடிகளையும் கேட்கிறோம்; ராஜீவ்காந்தி உயிரைப் பற்றி மட்டும் தானா உங்களுக்கு கவலை? ராஜீங்காந்தி மட்டும்தானா இந்தத் தேசம்?

25 ஆண்டுகளாக உயிர் வாழ்க்கைக்குப் போராடும் இந்த மக்களின் அவலங்கள், இந்த ‘டெல்லி சுல்தான்களின் காதுகளில் விழவில்லையா?

(பெரியார் முழக்கம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை)

1 comment:

Anonymous said...

Leave alone the useless people such as Swamy.

What is the leader of the entire Tamil Race (Mu Ka) doing ?

What are the Tamils doing - voting for Karunanidhi again even though he did nothing to help the dying Sri Lankan Tamils ?

Let us face it : Sri Lankan Tamils are a lost cause. Even the Tamil people in Tamil Nadu don't care about the Sri Lankan Tamils. It shows the selfish nature of the Tamils and their false leaders !

You may like this